பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் இலவசமாக ஸ்நாக்ஸ் வழங்கி வருகிறார் ஒருவர்!
உதகை நகராட்சி மார்க்கெட்டினுள் ஒரு டீக்கடை மாலை நேரம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் மொய்க்கிறார்கள்.
அந்த கடைக்காரர் அவர்களுக்குப் பாசத்துடன் போண்டா, பஜ்ஜி, வடை கொடுக்கிறார். குழந்தைகள் அதை மகிழ்ச்சியுடன் உண்கிறார்கள். கடைக்காரர் அவற்றை தினமும் இலவசமாக வழங்கி வருகிறார் என்பதை அறிந்து ஆச்சரியத்துடன் கடை உரிமையாளர் முகமது அலியை சந்தித்தோம்.
“காலை முதல் மாலை வரை பள்ளிக்கூடம் சென்று வரும் பிள்ளைகளுக்குப் பசியும், களைப்பும் அதிகம் இருக்கும். வீட்டுக்கு வந்தவுடன் விரும்பியதை சாப்பிட வேண்டுமென நினைப்பார்கள். நூறில் பத்து குழந்தைகளுக்கு மட்டுமே அந்த ஆசை நிறைவேறும்.
பெரும்பாலான குழந்தைகளின் குடும்ப சூழல் காரணத்தால் மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் கிடைக்காது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கு டீக்கடை நடத்தி வருவதால், மாலை நேரங்களில் போண்டா, பஜ்ஜி போன்ற பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
சிறுவயது முதலே பசியின் கொடுமையையும், வறுமையையும் ஒரு சேர உணர்ந்தவன் நான். அதனால் நான் பட்ட கஷ்டத்தை மற்ற குழந்தைகள் படக்கூடாது என்ற காரணத்தினால் எனது கடையில் தயாராகும் பலகாரங்களை இலவசமாக வழங்க விரும்பினேன். அதனால் கடை ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் போண்டா, பஜ்ஜியை சூடாக வழங்கி வருகிறேன்.
தினந்தோறும் பள்ளி நாட்களில் மாலை 4 மணிமுதல் 5 மணி வரை 100 க்கும் மேலாண் குழந்தைகள் வந்து தங்களுக்கு வேண்டியதையும், விரும்பியதையும் சாப்பிட்டுவது வழக்கம்…” என்கிறார் அவர்.
ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளி சென்று படித்த முகமது அலிக்கு அவர் பள்ளி சென்று வந்த காலத்தில் கடைத்தெருவில் வர்க்கி மற்றும் பிஸ்கெட் விற்பனை செய்பவர்கள் வர்க்கியையும், பிஸ்கெட்டையும் வழங்கியதாகவும், அதனை ஊக்கமாக எடுத்துக் கொண்டு தானும் அதேபோல செய்வதாகக் கூறுகிறார்.
ஆரம்பத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பாய் கடையில் போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர். நாளடைவில் தனியார் பள்ளி மாணவர்களும் இங்கு வரத்தொடங்கியுள்ளனர்.
வார நாட்களில் பத்தாயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் முகமது அலி, பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வழங்குவதற்காக மட்டுமே 10 முதல் 20 சதவிகித வருமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு இவர் போண்டா வழங்குவதால் அவரை ‘போண்டா பாய்’ என்றே அனைவரும் அன்புடன் அழைக்கிறார்கள்.
நன்றி: புதிய தலைமுறை - 17 நவம்பர், 2016